உலக தமிழ் செம்மொழி Headline Animator

Wednesday, June 16, 2010

குழந்தையின் சிரிப்பு

Tuesday, June 15, 2010

கோவில்களும் கோபுரங்களும்


கோவில்களின் முகப்பு நிலைகளை அலங்கரிக்கும் பிரதான கோபுரங்கள் “இராஜ கோபுரங்கள்”. “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”. மாட்டிடன் உள்ள பாலை காம்பு வழியாக கறப்பது எளிதானது அதுப்போல் எங்கும் நீக்குமற நிறைந்த இறைவனை எங்கு சென்று தரிசிப்பது என்று திகைக்கும் மானிடரை இங்கே வாருங்கள் என்று வழிக்காட்டி அழைக்கின்றன் விண்ணை முட்டும் படி ஒங்கி உயர்ந்து நிற்க்கும் இராஜ கோபுரங்கள்.
இராஜாக்களின் ஆட்சியின் சிறப்புகளையும், செல்வநிலைகளையும், பழம் பெருமைக் கொண்ட இந்தியாவின் இணையற்ற ஓவியம் மற்றும் சிற்ப கலைகளையும், தொன்மையான பழக்கவழக்கங்களயும் வருங்கால சந்ததியினரும் அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட கோவில்களும் கோபுரங்களும் இன்று போதுமான கவனிப்பு இன்றி சிறப்பிழக்கின்றன.
பழங்காலத்தில் தற்பெருமையால் மற்றவர்களை மதிக்காமல் இருக்க கூடாது என்பதற்காக அவன் இன்றி அவனியில் ஓர் அணுவும் அசையாது. அணுவுக்குள் அணுவாய் இருக்கும் இறைவனே ஆளும் அரசனைவிட பெரியவன் என்பதை மனம் மறக்கக்கூடாது என்பதற்காக தான் அரண்மனைகளை விட ஆலயங்களை உயர்ந்ததாக கட்டியுள்ளனர்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இணையற்ற இயந்திர நூதனங்களைக் கொண்டு அழகழகாய் ஆயிரம் கட்டிடங்களைக் கட்டினாலும், எந்தவிதமான உபகரணங்களின் வசதிகள் இன்றி ஆண்டவனின்ஆசியால் முழுக்க முழுக்க மனிதமுயற்சியால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் கோபுரங்களுக்கும் எதுவும் நிகராகாது.



“கிருத யுகம், திரோத யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு காலக்கட்டங்களில் தர்மத்தை நான்கு கால்களாக கொண்ட காமதேனு இந்த கலியுகத்தில் தர்மத்தை ஒரு காலாக மட்டும் கொண்டு தடுமாறி நிற்க்கும் நிலையிலும் தலைக்குனிந்து வீழாமல் காக்கும் கோவில்களில் பல, பலவகைப்பட்ட அன்னியர்களின் ஆதிக்கத்தில் அடிமைபடுத்த போதும், நசுக்கப்பட்ட போதும், சிதைக்கப்பட்ட போதும் சில கோவில்கள் அசையாமல் நின்று இந்தியாவின் இணையற்ற காவியங்களையும், காப்பியங்களையும், வேதங்களையும் காப்பாற்றிக் கொடுத்துடன் அல்லாமல் தங்களின் ஆண்டாண்டு பழமைகளை பறைசாற்றி பெருமைகளை வானாளி சொல்லுகின்றதற்க்கு அத்தாட்சியாய் காட்டுகின்றன இந்த இராஜகோபுரங்களை.


இந்திய தேசம் இயற்கையை சார்ந்த தேசம், அதைக் கொண்டே தொழில்கள் நடத்தப்பட்டு மக்களின் பொருளதார நிலையும் வாழ்க்கைத்தரமும் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கைத் தொடர்ந்து செம்மையாக நடக்கும் வகையில் அவர்களுக்கு கூலித்தரும் வகையிலும், புண்ணியம் கிடைக்கும்படியும், போரில் வென்றதற்க்கும், புலவர்களின் புகழ்பாமாலைக்கும் என பல்வேறு தன்மைகளுக்காக கட்டப்பட்ட தனித்துவம் பெற்ற கோவில்களின் கோபுரங்களின் இன்றைய நிலையை சொல்லவும் மனம் அஞ்சுகின்றது.
மேற்கூறியத்தற்க்கும் மேற்ப்பட்ட பல்வேறு சிறப்புகளை உடைய கோவில்களும் கோபுரங்களும் இன்று இயற்கையால் மட்டுமல்லாமல் மனிதனாலும் சிதைக்கப்படுகின்றன. புறக்கண்ணுக்குத் தெரியும் செல்வங்களைப் பாதுகாக்கும் நாம் பழம் பெருமைகளை விளக்கும் கோவில்களையும் கோபுரங்களையும் பாதுகாக்க தவறிவிட்டோம். பாதுகாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பாழ்படுத்தாமலாவது இருக்கலாம். பாதுகாப்பதும், பாழ்படுத்தாமல் தடுப்பதும் அரசின் வேலை என்று எல்லாச்செயல்களுக்கும் அரசை நோக்கி ஆள்காட்டிவிரலை காட்டுகிறோம். அரசைச்சுட்டி ஒருவிரல் காட்டும் நம்மை நோக்கி மடங்கியிருக்கும் மற்றவிரல்கள் நீ என்ன செய்தாய் என்பதைப்போல் காட்டுவதை மறந்து போகின்றோம். தனிப்பட்ட முறையில் நம்மால் முடிந்த கடமைகளை நாம் ஒழுங்காக செய்தாலே கோவில்களில் இறைவன் இச்சையுடன் இருப்பான். நம் இன்னல்களையும் தீர்த்து வைப்பான். அரசும், இந்து அறநிலையத்துறை, தொல்பொருள் பாதுகாப்புத்துறை முதலியவற்றின் மூலம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்தாலும் பொதுமக்களாகிய நம்முடைய செயல்பாடு அதிமுக்கியமானது.




இறைவனை மந்திரத்தால் இருக்கச் செய்வதைவிட மனதால் இருக்கச் செய்ய வேண்டும். அதற்கு கோவில்களையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும். நாம் மட்டுமே இருக்கும் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளச்செய்யும் முயற்சிகளில் சிலவற்றையாவது ஆலயங்களில் செயல்படுத்தலாம். பொதுவாக, ஓதுக்கப்பட்ட இடங்களில் கற்பூரம், விளக்குகளை ஏற்றலாம். கோவிலில் தரும் பிரசாதங்களை அங்கேயே கொட்டாமல் இருக்கலாம். குப்பைகளை அதற்குரிய இடத்தில் போடலாம். பிராத்தனை, பரிகாரங்கள் என்ற பெயரில் பொது இடங்களில் பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை போன்ற மற்றும் பல பொருட்களை உடைக்காமல், கொட்டாமல் நசுக்காமல் இருக்கலாம். பழித்தீர்க்க என்று பொதுச்சொத்துக்களுக்கு ஊறுவிளைவிக்காமல் இருக்கலாம். பணத்துக்காக என்று சிற்பங்களையும், சிலைகளையும் கடத்தாமல் இருக்கலாம். இதுப்போல் பல்வேறு தீயச்செயல்களை செய்யாமலும், மற்றவர்களுக்கு தீமைவிளைவிக்காமலும் இருந்தாலே ஆண்டவன் ஆலயத்தில் மட்டுமல்லாமல் நம்முடைய ஆன்மாவிலும் நிரந்தர வாசம் செய்வான்.







ஆறு இல்லா ஊரில் அழகு பாழ். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிகளுக்கு காரணம் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். நாட்டின் பசுமைக்கு நீர் முக்கியம் என்பதையும், இடி, மின்னல் போன்ற இயற்கை சீரழிவுகளிலில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் மறைப்பொருளாக வழக்கில் இருந்த சொற்றொடர்கள். கோபுரங்களின் கலசங்களில் இடம்பெற்றிருக்கும் சில சமித்துக்கள் இயற்கையின் சீற்றங்களைக்கட்டுப்படுத்தும். ஆனால் அவற்றை 12 ஆண்டுகளுக்கு ஓருமுறை புதுப்புக்க வேண்டும் என்பதற்காக நடைமுறையில் கையாளப்பட்டுவரும் பழக்கமே கோவில்களின் கும்பாபிஷேகம்.


இந்த நூற்றாண்டில் எவ்வளவு அதிவேகத்தில் அறிவியல் கண்டுப்பிடிப்புகளால், உலகத்தை உள்ளங்கையில் வைத்திருந்தாலும், நொடிக்கு நொடி உலகத்தின் நடப்புகளை அறிந்துக் கொண்டாலும், விஞ்ஞானத்தின் மூலமாய் வானத்தையே வசப்படுத்தி இருந்தாலும், நம் வாழ்க்கையின் போக்கையும் மனத்தின் மாற்றங்களையும் அறிந்துக் கொள்ள ஆண்டவன் குடிக்கொண்டு இருக்கும் ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்ற ஆன்மீககுணத்தில் மாற்றமில்லை. அதனால் தான் இப்போதும் பல்வேறு காரணங்களைக் கொண்டு பலவாறாக கோவில்கள் புதிது புதிதாக கட்டப்படுகின்றன. புதிது புதிதாய் ஆலயங்களை அமைப்பதை விட சிதைந்து புதர் மண்டி அழிவின் விளிம்பில் உள்ள ஆலயங்களை புணர் அமைக்கலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், உண்டிக்கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற பழமொழிகளுக்கு ஏற்ப கல்விநிலையங்களையும், அன்னச்சத்திரங்களையும், தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி ஏழைஎளியமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தலாம்.



அறிவியல் முன்னேற்றம் ஏற்படும் அதே வேகத்தில் ஆன்மீகத்திலும் முன்னேற்றம் காணப்படுவது மனதுக்கு சந்தோஷத்தை தருகின்ற அதே நேரத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் சிலர் செய்யும் அக்கிராமங்களால் மனம் பதைக்கின்றது. ஆன்மீகத்தின் மூலமாய் ஆண்டவனை அடையச் செய்பவனே குரு. அதற்கு இல்லறம் தடையல்ல, தன் கடமைகளை ஒழுங்காய் செய்தாலே இறைவன் இச்சையுடன் இதயத்தில் குடியிருப்பான். இதயத்தில் இறைவன் குடியிருக்க இன்பமன்றி துன்பமில்லை. நம் மனத்தின் எண்ணங்களை ஓழுங்குபடுத்தாதவரை மற்றவர்களால் நம் துயர் தீர்க்க முடியாது. அப்படி இருக்க சாமியார்கள் என்று கூறிக்கொள்பவர்களை நாடிச்சென்று நம் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து ஆன்மீகப்பணிகளை வியாபாரமாக்கி விடுகின்றோம்.


“மனம் போல் வாழ்க்கை என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.


புராதான கோவில்களையும் கோபுரங்களையும் காப்போமாக


Thursday, June 10, 2010

பஞ்சத்தந்திரம் ( விளக்கம்)

பஞ்சத்தந்திரம் ( விளக்கம்)

-இது உலகப்புகழ் பெற்றநூல். மகிலாரோப்பியம் என்ற நாட்டின் அரசன் அமரசக்தி என்பவருக்கு பிறந்த பிள்ளைகளைத் திருத்த பண்டிதர் விஷ்ணுசர்மா என்பவர் சொன்ன நீதிக்கதைகளே "பஞ்சத்தந்திரம்".  இவை நண்பரைப் பிரித்தல், நண்பரை அடைதல், பழகிக் கெடுத்தல், பேரழிவு, ஆராயாமல் செய்தல் என்ற முக்கியமான ஜந்து நீதித்துறைகளைக் கொண்ட கதைகள் ஆகும்.


கடவுளிடம் கேட்டேன்

கடவுளிடம் கேட்டேன்

நான் வல்லமை வேண்டும் என்று கேட்டேன்.
அவர் கஷ்டங்களைத் தந்தார்.
என்னை வலிமையானவாக ஆக்கிக் கொள்ள.

நான் நல்லறிவு வேண்டி நின்றேன்
அவர் தீர்வு காண்பதற்காக பிரச்சினைகள் பலவற்றை
என் முன்னே வைத்தார்.

நான் வளமை வேண்டும் என்று  ஆசைப்பட்டேன்
அவர் உழைத்து வேலை செய்ய திறமையும் அறிவும் தந்தார்

நான் மனோபலம் வேண்டும் என்று கேட்டேன்.
அவர் சவால்களை என் முன் கொண்டு வந்து நிறுத்தினார்

நான் அன்பைக் கேட்டேன்
அவர்  அன்புகாட்டி உதவி செய்ய துன்பப்பட்டவர்கள் அருகில்
என்னை அனுப்பி வைத்தார்.

நான் சிலசவுபாக்கியங்களையும், வசதிகளையும் கேட்டேன்
அவர் வாய்ப்புக்களைத் தந்தார்
என்னை வழிக்களை உருவாக்கச் செய்தார்

நான் பாதையை வேண்டி நின்றேன்
அவர் பார்வையை விசாலமாக்கினார்.
-நான் கேட்டது எதுவும் எனக்கு கிடைக்கவில்லை, ஆனால்
தேவையானது எதுவும் எனக்கு கிடைக்காமல் இல்லை


Thursday, June 3, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கலையின் மூலத்திற்க்கும்
   காதலின் நாயகனுக்கும்
ஆண்டவன் அள்ளித்தந்த
   அன்பு பரிசே

மேகங்கள் பூ மழைத்தூவ
  சந்தோஷ்ம்  சங்கீதம் பாட
நட்சத்திரங்கள் நாட்டியமாட
  விடியலாய் வந்த வெள்ளி நிலவே

இருட்டுக்குள் ஓளியானாய்
  இமைக்குள் கண்ணாய்
இதயத்தின் துடிப்பானாய்
   இருமனங்களின் சங்கமானாய்

பண்பின் சிகரமாய்
    பாரதத்தின் இலக்கணமாய்
பாரோர் போற்ற
     வாழ்க பல்லாண்டு

கவிதையின் கவிதையே
  காவியத்தின் ஓவியமே “ சாய் ரித்திகா”
இந்த ஓராண்டு மட்டுமல்ல
     ஓராயிராம் ஆண்டு நீ காண

உள்ளன்புடன் வாழ்த்தும் நெஞ்சங்கள்
      நேசத்தின் உச்ச உறவுகள் 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Tuesday, June 1, 2010

இந்தியாவல்லரசு ஆகுமா




இந்தியாவல்லரசு ஆகுமா
முன்னுரை:
      உலகநாடுகளில் நம்  இந்தியாவானது 1.1.மில்லியன் மக்கள் தொகையும் 297 மில்லியன் சதுரகிலோமீட்டர் பரப்பளவும்  கொண்டுள்ளது. .  ஆசியகண்டதிலேயே வேளாண்மையில் சிறந்தும், உலக அளவில் பத்தில் ஒரு பங்காக 56 மில்லியன் ஹெக்டர் பாசன வசதியுடன்கூடிய விளைநிலத்தையும் 8129 கிலோ மீட்டர் நீளமள்ள கடற்கரைப்பகுதி மற்றும் பிற இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள நி்லையிலும்  வளரும் நாடுகளின் வரி்சையில் உள்ளதே தவிர வளர்ந்த நாடாகவோ, வல்லரசாகவோ மாறவில்லை. இயற்கை இயன்றவரை உதவியும் மாற்றம் நிகழாமல் இருப்பதற்க்கு மனிதமனமே காரணமா? ஆராய்வோம்.

உணவும் பசியும்:
       இந்தியா , உலகிலேயே அதிக அளவு ஆண்டுக்கு 99 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்கிறது.
1979 மில்லியன் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்து உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
2263 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்து
உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
489 மில்லியன்  கோழிகள் மற்றும் 45200 மில்லியன் முட்டைகள் உற்பத்தி செய்து உலகிலேயே நான்காவது
இடத்தில் உள்ளது.
       கடந்த20 ஆண்டுகளில் நம் நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் உயர்ந்த போதிலும் பசிக் கொடுமைக்
குறையவில்லை என்பது மிகவும் வருத்தப்படக்கூடிய செய்தியாகும்.. உணவு உற்பத்தியில் தன்னிறையில்லை என்றாலும் போதுமான அளவுக்கு குறைவுயில்லா நிலையிலும் பசிக் கொடுமையால் இறப்போர் விகிதம் குறைந்திருக்கிறதே அன்றி நிற்கவில்லை. "தனிஒருவனுக்கு உணவுயில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்று அன்றே சொன்னார் பாரதியார்.  ஆனால் அவரையே நாம் பசியால் சாகவிட்டோம்.

ஒருவேளை உணவுக்காக காத்திருப்போரைக் கருத்தில் கொண்டு, எல்லாதவறுகளுக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது பசியே என்பதை அறிந்து அதைப் போக்கும் முயற்சியில் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

சமச்சீர் உணவு, சுத்தமான குடிநீர், சுகாதாரமான சுற்றுச்சூழல் ஆகியவற்றை அடிப்படை மனித உரிமையாக்க வேண்டும் அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைக் கைக்கொள்ள , அரசியல் ஆதரவு அளிக்க ஐக்கிய நாட்டுசபை ஜீ-8,ஜீ-20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்டு சட்டபூர்வ அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

வேலைவாய்ப்பும், கல்வியும்:
சுதந்திர போராட்டக்காலத்தில் 10 சதவீதமாக இருந்த கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை இன்று 61சதவீதமாக உயர்ந்துள்ளது. எஞ்சியுள்ள பாமரனும் படிக்க இலவச கல்வித்திட்டத்தையும் தகுந்த இட 
ஓதுக்கீட்டினையும் நலிந்த மக்களுக்கு தரவேண்டும். அனைவருக்கும் கல்வி, மற்றும் சமச்சீர் கல்வி போன்ற திட்டங்களுக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும். இமயம் முதல் குமரி வரை வாழும் மக்களின் மனங்களில் பேதமைக்கு வித்திடாமல் அனைவரும் ஒன்றே என்பதை கல்வியின் மூலம் தெளிவுப்படுத்த வேண்டும்

மனிதவளத்தில் 3-ம் இடத்தில் உள்ள நாம், நம் திறமைகளை அயல் நாட்டின் வளர்ச்சிக்கும், நம் அதிகப்படியான தேவைகளுக்காகவும், விற்கும் பழக்கத்தினை முற்றிலு்மாக கலையவேண்டும். வேலைவாய்ப்பு இன்மையும், தகுதிக்கான வேலையில்லை என்பதையும் களைய அரசு முயற்சிக்க வேண்டும். அணைகள், கட்டிடங்கள் போன்ற சொத்துக்களை உருவாக்குவதன் மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ற தொழில்வளங்களை நாமும் கண்டறிய வேண்டும். "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்பதை உணர்ந்து நம் நாட்டின் வளங்களையும், நிலைகளையும் அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டு நம்மையும் உயர்த்திக்கொண்டு நாட்டையும் முன்னேற்ற வேண்டும்

மக்கள் தொகையும், வாழ்க்கைமுறையும்:
நம் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மக்கள் தொகையின் அதித வளர்ச்சியே ஆகும். மக்கள் தொகையில் நம் நாடு உலக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
 
மக்களின் நல்வாழ்விற்க்காக அரசு இயற்றும் திட்டங்கள் எல்லாம் பற்றாக்குறையாகவே இருப்பதற்க்கு நம்முடைய செயல்பாடுகளும் காரணமாகும்.  இந்தியா பல்வேறு மதம், இனம், மொழி என்று பிரிவினைகளைக்  கொண்டு ஒருங்கிணைந்த சமுதாயம். சமுதாயத்தின் வளர்ச்சிக்கு கொண்டுவரப்படும் திட்டங்கள், நம்முடைய குறுகிய மனப்பான்மையால் ஓதுக்கீடு என்ற பெயரில் ஓங்கிவளராமல் பங்கீடுகளாக பதுங்கி உள்ளது. சிலர் பழக்கவழக்கங்கள்  எனறு முன்னேற்றத்திட்டங்களை முடக்குகின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மட்டும் முற்போக்குநிலை நீடித்தால் போதாது எண்ணங்களிலும், செயல்களிலும் முற்போக்குத்தன்மை வேண்டும்

வறுமையும்  பற்றாக்குறையும்:
வறுமை என்பது பற்றாக்குறையே.  தனிமனிதனுக்கு தேவையான இடம், உணவு, உடை, கல்வி போன்றவற்றில் குறைவு உண்டொனில் அது பற்றாக்குறையே. இல்லை என்பதையே இல்லாமல் ஆக்க வேண்டும் அதற்கு மக்களின் மனப்போக்கு மாற வேண்டும்.  வறுமைகோட்டிற்க்குகீழ் வாழும் மக்களின் வளர்ச்சிக்கு உதவும் திட்டங்கள் பல இருந்தாலும் நிலைமையில் மாற்றமில்லைக் காரணம். உழைப்பால் வரும் ஊதியம் தேவைக்கும் குறைவாக இருப்பதே. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், சாராயம், புகைபிடித்தல் போன்ற தீயப்பழக்கங்களும், லஞ்சம், ஊழல், பதுக்கல், கடத்தல் போன்ற சமூகக்குற்றங்களும், தனிமனித சுயநலமும், ஆடம்பரங்களும் பற்றாக்குறையை மிகைப்படுத்தி 
வறுமையை வளரச்செய்கின்றன. வறுமையைவிடக் கொடியது வேறுயில்லை என்பதை உணர்ந்து, அதை அழிக்க முடியாவிட்டாலும் தடுக்க முயலவேண்டும்.

சுத்தமும், ஆரோக்கியமும்
மனிதனின் ஒழுக்கம் குன்றும் போது, உடலும், மனமும் மாசுப்படுகின்றன. அதனால் ஆரோக்கியம் சீர்க்குலைகிறது. நாம் நம் இருப்பிடத்தை சுத்தமாக வைக்க முயலும் வேளையில் சுற்றுபுறத்தின் தூய்மையை மறந்து அசுத்தமாக்கிவிடுகிறோம்.  தேங்கிய கழிவுநீர், சுத்தமற்ற குடிநீர், அசுத்தமான சூழ்நிலையில் உற்பத்தியாகும் கொசு மற்றும் பூச்சிகளால் புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதனின் மரணத்தை துரிதப்படுத்துகின்றன. மனிதனின்  எண்ணங்கள் அவனின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. சீர்க்குலைந்த ஆரோக்கியத்தால் அவனின் மனம் எதிர்காலத்தையும் எண்ணாமல் நிகழ்காலத்தையும் நினைக்காமல் இருட்டுக்குள் இலக்கின்றி தவிக்கும். பொருளாதார சீர்க்குலைவை ஏற்படுத்தும். மருத்துவ ஆராய்ச்சிக்கு மாசுகற்பிக்கும். "சுத்தம் சோறு போடும்" என்ற பழமொழி ஆரோக்கியத்தின் அவசியத்தையும், சுத்தமே சுகம் என்பதையும்  தெளிவுப்படுத்துகிறது.

சீரான கால்வாய்களும், தூய்மையான சுற்றுபுறமும் சுத்தமான குடிநீர்,  சத்தான உணவு  அமைதியான உள்ளமும் ஆரோக்கியத்தின் அடிப்படையாகும். வீட்டையும், நாட்டையும் சுத்தமாக வைப்போம்.
குற்றமும் தண்டனையும்:

குற்றங்களால் நாட்டின் வளர்ச்சி குன்றிபோகும். தீமையால் தான் நன்மை எது என அறியமுடியும்.  ஆனால் நன்மை எது என அறிந்துக் கொள்ளமுடியாத அளவுக்கு தீமைகள் அதிகரித்து விட்டது. தான் செய்வது குற்றம் என்று உணரக்கூட முடியாதநிலையில் சமூகத்தின் சூழ்நிலையும், குற்றவாளிகளும் உள்ளனர். குற்றத்தில், சிறியது, பெரியது என்ற பேதம் இல்லை ஆனால் குற்றவாளிகளிலும் அவர்களின் சூழ்நிலையிலும் பேதமுள்ளது. "ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதிக்கூட தண்டிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் குற்றங்கள் பெருகவும், குற்றவாளிகள் தப்பிக்கவும் காரணமாகிவிட்டது. ஏனென்றால் சட்டம் போடுபவரே அதை மீறுபவராகவும் உள்ளனர். ஆளும் அரசிலிருந்து, அரசியல்வாதி, ஆன்மீகவாதி, கல்வித்துறை, காவல்துறை, வழக்கறிஞர், மருத்துவர் மட்டுமல்லாமல் வாழ்வதற்க்கு வழியில்லாத மக்கள் என பலத்தரப்பட்ட வகையிலும் குற்றம் புரிபவர்கள் குவிந்துள்ளனர். தண்டனைத்தர வேண்டியவர்களே தண்டிக்கப்படவேண்டியவர்களாகவும் உள்ளனர். தண்டனை என்பது  செய்த குற்றத்திற்க்கு மட்டுமல்லாமல் அதுபோன்றக்குற்றத்தை இனியாரும் செய்யாமலும் தடுக்கும் வகையில் கடுமையாக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கையை சீர்ப்படுத்தவும் வேண்டும். குற்றமற்ற மனித சமூகத்தால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழிக்காட்டமுடியும்
 
அறிவியலும், அணுஆயுதமும்
ஒருநாட்டின் வளர்ச்சி என்பது அறிவியலின் வளர்ச்சியை வைத்தே மதிப்பிடப்படுகிறது.  அறிவியலின் அதித வளர்ச்சியால் மருத்துவத்துறையும், போக்குவரத்துத்துறையும், தொலைத்தொடர்புத்துறையும், பெரும் மாற்றத்தையும், வானவியல் ஆராய்ச்சியில் அதிசய மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ள அதே வேளையில் அணுஆயுதத்தையும் கையகப்படுத்தியுள்ளான். அறிவியலால்  ஆக்கவும், அழிக்கவும் முடியும் என்பதற்க்கு நம்முடைய கண்டுப்பிடிப்புகளே உதாரணம். வானத்தை கையில் வைத்துள்ள நிலையில்நம் வாழ்க்கைத்தரம் உயர்ந்து இருந்தாலும், வாழ்க்கை நிலையாமைப்பற்றிய பயத்துடனும் நாம் வாழ்ந்துக் கொண்டுயிருக்கிறோம். . அணு ஆயுதங்களால் இந்த உலகைப்பலமுறை அழிக்கலாம். ஒருமுறைக்கூட நம்மால் அழகாக உருவாக்கமுடியாது என்பதை நினைவில் கொண்டு அணுஆயுதப்பரவலை ஒட்டுமொத்தமாக உலகஅளவில்  அழிக்க வேண்டும்.

வளர்ச்சியும் வீழ்ச்சியும்
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்தியா என்றால் இப்படிப்பட்டது என்ற வரைமுறைக்கு இப்போது தான் வந்துள்ளோம். நம்முடைய  தோற்றம், கலாச்சாரம், வாழ்க்கைமுறை, பண்பாடு செல்வவளங்களைப்பற்றி வரலாற்றில் தான் அறிந்துள்ளோம், அதேப்போல் நம்முடைய வேற்றுமையால் விளைந்த இன்னல்களையும், அழிவுகளையும், பறிக்கொடுத்த செல்வங்களையும் பற்றியும் தெரிந்துக்கொண்டோம். ஆனால் அதுப்போல் இனியும் நடக்கமல் கவனமாக நடந்துக்  கொள்ளவேண்டிய நாம் பணத்துக்காக மற்ற நாட்டவர் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டு மீண்டும் நம்முடைய வீழ்ச்சிக்கே வித்திடுகிறோம். வளர்ச்சியும் வீழ்ச்சியும் நம்முடைய செயல்பாடுகளே தீர்மானிக்கின்றன. கவிஞர் பாரதிதாசன சொன்னப்படி"புதியதோர் உலகம்  செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"


முடிவுரை:
வலுவான, பாதுகாப்பான மற்றும் அனைவரின் நலன் நாடும் இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் அரசின் கரங்களை வலுப்படுத்த ஒன்றுப்படுவோம். தலைநிமிர்ந்து வெற்றிநடைப்போடும் இந்தியாவை படைப்போம்.
 
   உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
   சேராது இயல்வது நாடு   (குறள்-734)
பசிப்பட்டினி கொடுமைகளும், நீங்காமல் இருந்து மக்களை அச்சுறுத்தும் நோய்களும், அடிக்கடி ஏற்படும் உள்நாட்டு பூசல்களும் பகைநாட்டுத்தாக்குதல்களும் இல்லாமல் அமைதி நிலையில் வாழ்வதே சிறந்த நாட்டிற்க்கு அழகு.

அந்த அழகு நம் நாட்டிற்க்கு அடிப்படையாக அமைய நாம் அனைவரும் முழுமூச்சுடன் ஒற்றுமையாக செயல்பட்டாலே
போதும்.  நல்லமக்கள் வல்லவர்களாக இருந்தாலே நாடுவல்லரசு ஆகும்.