உலக தமிழ் செம்மொழி Headline Animator

கவிதைகள்

கருவறை காவியம்


என் கண்மணிக்கு,

என் கண்ணின் மணியாய் வந்தவனே

என் பார்வைக்கு ஒளியை தந்தவனே



என் கருவில் உருவான கவிதையே

என் வாழ்வின் காவியத்திற்க்கு ஒவியமே

உன் பிறப்பால் என் பிறப்பை அம்மா என அர்த்தம் ஆக்கியவனே

உன் செப்பிதழால் என் முலைப்பால் அருந்தி அம்மாவின்

அருமை உணர்த்தியவனே

உன் மழலைமொழியால் அம்மா என அழைத்து ஆனந்தப்படுத்தியவனே




குயிலோசையும் குன்றுமே—உன் மழலைக்குரலில்

அன்னநடையும் அஞ்சுமே-உன் தளிர்நடையில்

மானின் பார்வையும் மருளுமே-உன் கருணைப்பார்வையில்

மயிலின் ஆட்டமும் மங்குமே-உன் மாய ஆட்டத்தில்




தத்திநடக்கும் உன் தந்தக்காலுக்கு

தாத்தாவின் தங்ககொலுசு தாளம் போடுமே

பாவம்காட்டும் உன் வைரக்கைக்கு

பாட்டியின் வைரக்காப்பு வார்த்தை சொல்லுமே

சிந்தைக்குளிரும் உன் முத்துசிரிப்புக்கு

சின்னமாமாவின் முத்தாரம் முத்திரை பதிக்குமே


உன் அழகிய சிரிப்பில் அகமகிழ்ந்தேனே

உன் அழுகையில் உயிர்கரைந்தேனே

உன்னில் என்னை கண்டேனே

உன்னையே நானாய் உண்ர்ந்தேனே


என் வாழ்வில் வந்தவனே

என்னை வாழ்விக்க வந்தவனே

என் வாழ்வாய் ஆனவனே

வாழிய நீ பல்லாண்டு



-அன்பு முத்தங்களுடன் அம்மா