மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
பூக்கள் தேன் சிந்த, புதுவசந்தம் திரண்டுவர கிடைக்கவில்லை சுதந்திரம்
ஆங்கிலேயரின் அடிசுமந்து, அன்னை பூமியில் இரத்தம் சிந்தி
விரதத்தில் உடல் நலிந்து, பட்டினியில் பலமிழந்து
சித்ரவதையில் சிதைந்து, உப்பெடுக்க உயிர் கொடுத்து
நேர்மையாய் எதிர்த்து, நேரிடையாய் போராடி
கண் உறங்கினாலும், மனமுறங்காமல்
விடியலில் வாங்கிய சுதந்திரம், வீணாய் போகும் சுதந்திரம்
சும்மா கிடைக்காது சுதந்திரம், போராட்டமே அதன் மந்திரம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
அடுப்பெரிக்கும் பெண்ணுக்கு படிப்புஎடுத்தற்க்கு என்று
அடிமையாய் இருந்தபோதும் ஆதரவுக்கு பஞ்சமில்லை அன்று
ஆணுக்கு பெண் அடிமையில்லை என்று அரசு சொன்னாலும்
ஆட்சியில் 33% த்திற்க்கு கூட ஆதரவுஇல்லை இன்று
வரமாய் பெண்ணிருக்க வேண்டுமாம் வரதட்சணை
வராது போனால் வாய்க்கரிசி பெண்களுக்கு மட்டுமல்ல-சிசுக்களுக்கும் தான்
பெண்ணாய் பிறந்தால், நீ புண்பட்டது போதும்,
சிந்திய கண்ணீர்துளிகளை சிகரமாக்கு, புன்சிரிப்பால் புதியபாதைபோடு
சுமைகளை சொந்தமாக்கு, சோகத்தை சுகமாக்கு,
சும்மா கிடைக்காது சுதந்திரம், போராட்டமே அதன் மந்திரம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
அதிகாரவர்க்கத்திற்க்கு அடிமையாகி, திறமைகளைதிசைத்திருப்பி
தினக்கூலிக்கு உன் உழைப்பைதீனியாக்கும் மானிடா
கூலிமட்டுமே கொள்கையானால், வாழ்க்கை எங்கே
ஏணியாய் நீ இருந்தால், ஏற்றம் காண்பது எப்போது
முதலாளி முன்னேறினால் போதாது, உழைப்பாளியும் உயரவேண்டும்
தொழிலாளி தோள் நிமிர்ந்தால் தோல்விகள் துவண்டுவிடும்
தினப்போராட்டத்தை மானப்போராட்டமாக்கு
திறமைக்கு தீனிப்போடு, வறுமையை வளமாக்கு,
சும்மா கிடைக்காது சுதந்திரம், போராட்டமே அதன் மந்திரம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
சாதி என்ற சாத்தானையும், மதம் என்ற மாயபிசாசையும்
தீண்டாமை என்ற தீயபூதத்தையும், உயிராய் காக்கும் மானிடா
உன் உயிர்க்கும், வாழ்க்கைக்கும் அவை உறுவிளைவிக்கும் என்பதை மறவாதே
நாம் வகுத்தசாதி வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும்
சாதிக்க தடையாய் நிற்க்கும் சாதியை சாகடித்துவிடு, நீ சாகாதே
நாம் தொகுத்தமதம் மனிதனை மேம்படுத்த வழிவகுக்க வேண்டும்
மலரும் மண்ணை மயனமாக்கும் மதத்தை மக்கவிடு, நீ மக்காதே
நாம் பகுத்ததீண்டாமை தீமையை விலக்க வழிவகுக்க வேண்டும்
தீரமாய் வாழும் மக்களை தீக்குளிக்க வைக்கும் தீண்டாமையை தீயிலிடு, நீ தீயாதே
உன்னை சீர்படுத்தவந்தமுறையை சீராக்கு
தீமைகளை திருத்து, வேற்றுமையை விலக்கு
சும்மா கிடைக்காது சுதந்திரம், போராட்டமே அதன் மந்திரம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
மன்னராட்சி மறைந்தாலும் மக்களாட்சி மலர்ந்தாலும்
மறையவில்லை வாரிசுரிமை ஆட்சி
வாக்குரிமையிருந்தாலும் வாரிசுரிமையில்லை எனில்
வாகாய் தோள் கொடுக்க மட்டுமே தொண்டர்களும், தோழர்களும்
ஆட்சியில் அமர நாட்டின் மேல் பற்றுள்ளவர்களாய்
நிர்வாகதிறமை உள்ளவர்களாய், அக்கறையுள்ளவர்களாய் இருந்தால் போதாது
பணம் படைத்தவர்களாகவும், பாசமாய் பேசுபவர்களாகவும்
மக்களின் மனத்தை படிப்பவர்களாகவும், நடிப்பவர்களாகவும் இருக்கவேண்டும்
அரசு என்பது தனித்துறையல்ல அரசியல்வாதியும் தனிமனிதனல்ல
நம்நலனுக்காக நம்மால் உருவாக்கப்பட்டது அதில் நாமும் பங்கு பெறலாம்
சுயநலத்துக்கு சூடுபோடு, பொதுவுடமையைப் போற்று
அக்கறையுடன் செயல்படு, ஆதிக்கமனப்பான்மை அகற்று
சும்மா கிடைக்காது சுதந்திரம், போராட்டமே அதன் மந்திரம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
இன்றைய விதையே நாளைய விருட்சம்
இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவின் நாயகர்கள்
விதைகளில் வித்தியாசம் இருந்தாலும் மழையில் மாற்றமில்லை
குறும்புகள் செய்யும் அரும்புகளிடம் பழக்கத்தில் மாற்றமிருக்கலாம்
பிறப்பில் வித்தியாசமிருந்தாலும் வளர்ப்பில் வகைவேண்டாம்
வாழும் நாட்டில் வசதியில்லாமல் இருக்கலாம்
வாழ்க்கைக்கல்வியில் வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடாது
நம்முடைய பராமரிப்பில் பாகுபாடு வேண்டாம்
நறுமணம் வீசும் மலர்களை நசுக்க வேண்டாம்
சமச்சீர்கல்வி பயிற்றுவிப்போம், சமுதாயத்தை சமன் படுத்துவோம்
அனைவருக்கும் கல்வி, அதுவே நம் ஆதாரம்
சும்மா கிடைக்காது சுதந்திரம், போராட்டமே அதன் மந்திரம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
அடிமைத்தனத்தைக் கூட நாம் அரிவாளால் வெட்டவில்லை
நம் வாழ்க்கைத் தேவைகளுக்காக, அதிக பணத்துக்காக
நம் அரசுக்கு எதிராக ஆயுத புரட்சிச்செய்கின்றோம்
அப்பாவிமக்களை கொல்கின்றோம், அன்னியசக்திக்கு உடன்படுகின்றோம்
வாழ்க்கைத் தேவைகளுக்காக வாய்ப்புகள்
கிடைக்காமல் வஞ்சிக்கபடுவோர் பாதை மாறினால்
பாரதமே பாழாகதோ, பண்பாடே சீர்க்குலையாதோ
தீவிரவாதிகளாய் திசைமாறிபோகின்றோம், திக்கற்றுவாழ்கின்றோம்
போராளிகளாய் புத்திமாறிபோகின்றோம், பொய்யாய்வாழ்கின்றோம்
வசதியைத்தேடி வாழ்க்கையை தொலைக்கின்றோம்
வாழ்க்கைக்காக போராடினால் வாழ்வதுதான் எப்போது
நீங்கட்டும் வறுமை, மறையட்டும் வன்முறை
அறியாமையை அரிதாக்குவோம், கல்லாமையை இல்லாமையாக்குவோம்
வாய்ப்புக்காக காத்திராமல், வசந்தங்களை உருவாக்குவோம்
சும்மா கிடைக்காது சுதந்திரம், போராட்டமே அதன் மந்திரம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்
அன்னிய ஆதிக்கத்தைக் கூட அகிம்சையால் வென்றோம்
அன்பாய் ஆள வேண்டிய நாட்டை ஆயுதத்தால் ஆள்கிறோம்
ஊக்கமுடன் பணியாற்றி ஆக்க வேண்டிய நாட்டை
அன்னிய சக்திகளிடமிருந்து காக்க வேண்டி ஆயுதம் எடுக்கின்றோம்
அணுக்குண்டும், ஆயுதமும். அறிவியல் வளர்ச்சி என்கின்றோம்
வல்லரசாக தன்னை முன் நிறுத்திக்கொள்ளும் முயற்சி செய்கின்றோம்
கஜானாவை காலி செய்கின்றோம்,உலகவங்கியிடன் கடன் வாங்கின்றோம்
உலகநாடுகளுடன் ஒப்பந்தம் போடுகின்றோம், ஒளிர்கின்றோம்
மக்களின் மகத்தான வாழ்வுக்கு வழிக்காணோம்
கவலைகளை கலையக்காணோம், உணவுக்கு உத்திரவாதம் காணோம்
தேவைகளை பூர்த்திச்செய்வோம், முன்னேற்றத்தை முன்னிறுத்துவோம்
மக்களின் மனங்களை ஆளுவோம், வாழ்க்கையை மலரச்செய்வோம்
சும்மா கிடைக்காது சுதந்திரம், போராட்டமே அதன் மந்திரம்
அரசியல் அசிங்கமாகிவிட்டது என்று ஒதுங்கிப்போனால்
சுத்தப்படுத்துவது யார் பொறுப்பு
உழலும், லஞ்சமும் அரசு அங்கமாகிவிட்டது என்றுஒத்துப்பாடினால்
களையெடுப்பது யார் பொறுப்பு
கல்வியும், கலாச்சாரமும் சீர்க்கெட்டுவிட்டது என்றுசிந்துபாடினால்
சீர்ப்படுத்துவது யார் பொறுப்பு
பொறுப்புகளை விருப்பங்களாக்கி போர்வையாய் புனைந்துக்கொண்டால்
புல்லர்கள் புதைந்து போவார்கள் கள்ளர்கள் காணாமல் போவார்கள்
மண் பார்த்துப் பொழிவதில்லை-மழை
நிறம் பார்த்து சுமப்பதில்லை-நிலம்
களம் பார்த்து வீசுவதில்லை-காற்று
மனிதமனத்துள் மட்டும் மக்காத பேதம்
எல்லோருக்கும் இரத்தம் சிவப்பு, கண்ணீர் உப்பு
காணாதே இதில் கலப்பு, காண்பதை ஓப்பு
அனைவரிடமும் அன்புக்காட்டி, ஆயுதம் விலக்கி
உருவாக்குவோம் நல் சமுதாயத்தை
அனைவரிடமும் நேர்மை, நியாயம் காட்டி.பொய்மை, அந்நியம் போக்கி
உருவாக்குவோம் புதிய சமுதாயத்தை
எதிர்படும் முகத்தில் என்றும் புன்னகைக்காண
இனியாவது மாறட்டும் மனிதமனம்
மலரட்டும் மனங்கள்; பூக்கட்டும் புதிய பாரதம்